Friday, September 7, 2012

சென்னை தங்க சாலை (MINT STREET) பற்றிய வரலாற்று தகவல் !!!

மெட்ராஸ் மாநகரின் மிக நீண்ட தெரு என்ற பெருமைக்கு உரியது தங்க சாலை (MINT STREET). அரசின் நாணயங்களை அச்சடிக்கும் தொழிற்சாலை இங்கு இருந்ததால், இந்த சாலைக்கு இப்பெயர் வந்தது. நாணய சாலை இங்கு எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள நாம் மெட்ராஸ் நகரம் உருவான காலத்திற்கு செல்ல வேண்டும்.

ஆம், 1639ஆம் ஆண்டு விஜயநகர அரசரின் பிரதிநிதியான வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து மெட்ராஸின் நிலப்பகுதியை வாங்கிய கிழக்கிந்திய கம்பெனியார், இங்கு நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடும் உரிமையையும் பெற்றனர். எனவே புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே ஒரு நாணய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கிருந்த சில செட்டியார்கள் ஒப்பந்த அடிப்படையில் இதனை இயக்கி வந்தனர். நாணயத்தை அச்சடிக்கத் தேவையான தங்கத்தை கிழக்கிந்திய கம்பெனி இறக்குமதி செய்து தரும். பின்னர் 1650களில் இந்த நாணயக் கூடத்தை கிழக்கிந்திய கம்பெனி தானே இயக்குவது என முடிவு செய்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகையின்போது, விஜயநகர அரசின் நாணயங்கள்தான் இப்பகுதியில் புழக்கத்தில் இருந்தன. விஷ்ணுவின் வராக அவதாரத்தை தாங்கி வெளியான இந்த நாணயங்கள் விஜயநகர தங்க வராகன்கள் என அழைக்கப்பட்டன. இதனிடையே கிழக்கிந்திய கம்பெனியும் தங்க நாணயங்களை வெளியிட்டதால் அவை மெட்ராஸ் வராகன்கள் எனப் பெயர் பெற்றன. இவை விஜயநகர நாணயங்களை விட எடை குறைவாக இருக்கும், அதேபோல இதன் மதிப்பும் குறைவுதான்.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்த நாணயக் கூடம், தங்க மற்றும் வெள்ளிப் பணங்களை வெளியிடத் தொடங்கியது. பின்னர் செப்புக் காசு, துட்டு ஆகியவை அச்சிடப்பட்டன. 1692 முதல் முகலாயர்களின் வெள்ளி ரூபாய்களையும் அச்சடித்துக் கொள்ளும் உரிமை இந்த நாணயக் கூடத்திற்கு அளிக்கப்பட்டது. பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை கொடுத்து, மெட்ராஸ் அல்லது முகலாய ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ரூபாயை அச்சடித்துக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் 1695ஆம் ஆண்டு கோட்டைக்குள் ஒரு புதிய நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டு சில ஆண்டுகள் கழித்து கோட்டைக்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 1742ஆம் ஆண்டு கோட்டைக்கு வெளியே ஒரு நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் சிந்தாதிரிப்பேட்டை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது தொழிற்சாலை கோட்டைக்கே திரும்பிவிட்டது. இப்போது கோட்டைக்குள் இரண்டு நாணயத் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின.
1815ஆம் ஆண்டு ரூபாய், அணா, பைசா என நாணயத் தொழிற்சாலையின் பணி பல மடங்கு அதிகரித்தது. எனவே கோட்டைக்கு வெளியே ஒரு பெரிய நாணய தொழிற்சாலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனின் வடக்கு பகுதியில் பயன்பாடற்று கிடந்த வெடிமருந்து தொழிற்சாலையை நாணயத் தொழிற்சாலையாக மாற்றலாம் என டாக்டர் பானிஸ்டர் என்பவர் யோசனை தெரிவித்தார். அப்படித்தான் தங்க சாலைக்கு வந்து சேர்ந்தது நாணயத் தொழிற்சாலை.
அதற்கு முன்பெல்லாம் இந்த சாலையை வண்ணார் சாலை என்றுதான் அழைப்பார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் துணி வியாபாரத்திற்காக நியமிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் இந்தப் பகுதியில்தான் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் இங்கு அமைக்கப்பட்ட நாணயத் தொழிற்சாலை, 1842ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கியது. இதனிடையே பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் இரண்டு பெரிய நாணயத் தொழிற்சாலைகளை கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. மெட்ராஸ் நாணயச் சாலை இவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தது.

குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இந்த இரண்டு தொழிற்சாலைகளும் உருவெடுத்ததை அடுத்து, மெட்ராஸ் நாணயச் சாலைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. எனவே 1869ஆம் ஆண்டு இது மூடப்பட்டு, இந்த இடத்தில் அரசு அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அச்சகம் இன்றும் செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் முதல் சலான்கள் வரை தமிழக அரசின் அனைத்து அச்சுத் தேவைகளையும் இதுதான் நிறைவு செய்து வருகிறது.

நாணயங்களோடு நெருங்கிய நட்பு பாராட்டிக் கொண்டிருந்த தங்க சாலை, பின்னர் அச்சகங்களின் முகவரியாக மாறியது. ஆறுமுக நாவலரின் நாவல வித்யானுபால அச்சகம் இந்த தெருவில் தான் இருந்தது. ஆனந்த விகடன் தனது ஆரம்ப நாட்களில் இங்கிருந்துதான் வெளியானது. 1880களில் தி ஹிந்து பத்திரிகை வாரத்திற்கு மூன்று முறை வந்துகொண்டிருந்தபோது, தங்கசாலையில்தான் அச்சடிக்கப்பட்டது.

இசைக்குகூட இந்த தெருவுடன் நிறைய தொடர்பு இருக்கிறது. டிக்கெட் வாங்கி கச்சேரி பார்க்கும் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே இங்கிருந்த தொண்டைமண்டல சபாதான். திருவையாற்றில் ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனையை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முடிவு இந்த தெருவில்தான் எடுக்கப்பட்டது. இங்கிருக்கும் தொண்டை மண்டல துருவ வேளாளர் பள்ளியில் 1908ஆம் ஆண்டு கூடிய இசைக் கலைஞர்கள் தான் இந்த முடிவை எடுத்து செயல்படுத்தியவர்கள். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஹரிகதா காலட்சேபத்தை முதல்முறையாக சரஸ்வதி பாய் என்ற ஒரு பெண் அரங்கேற்றியதும் இதே தங்கசாலையில்தான்.

இப்படி நிறைய சிறப்புகளைப் பெற்ற தங்க சாலையில் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மார்வாடிகள், குஜராத்திகள் என பல்வேறு தரப்பினரும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு அற்புதமான கலாச்சாரக் கலவையைக் கொண்டிருக்கும் இந்த நீண்ட தெரு, உண்மையில் 'தங்க' சாலைதான்.

* வடலூர் வள்ளலார் வாழ்ந்த வீராச்சாமி தெரு வீடும் இந்த பகுதியில்தான் இருக்கிறது.

* பேரறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது தொத்தாவுடன் இந்த தெருவில்தான் வசித்து வந்தார்.

* கெயிட்டி திரையரங்கு மூலமாக, தென் இந்தியாவில் முதல் தியேட்டர் கட்டிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ரகுபதி வெங்கய்யா, தங்கச்சாலையில் கட்டியதுதான் கிரவுன் தியேட்டர்.

Monday, September 3, 2012

கோஹினூர் வைரம்

இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்



ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.


இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.


இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.


அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர்.


போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.


பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்


டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்.


பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்...

Tuesday, August 14, 2012

சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல் !!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம். ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இப்போது சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக பரமர்த்து வேலை நடைபெற்று வருகிறது

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய் நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின் மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது. அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல் மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன் என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது. நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம் தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ. 7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ - சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன் நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ் மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி. மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர் குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம். ரிப்பன் மாளிகை விரைவில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நாமும் அதற்கு மெட்ரோ ரயிலில் சென்று பூங்கொத்து கொடுக்கலாம்.

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.

Thursday, August 9, 2012

தமிழ் உலகம்

உலக நாடுகளில் ஆட்சி பொறுப்பில் தமிழர்கள்

இந்தியா

சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், உள்துறை அமைச்சர், மேற்கு வங்க ஆளுனர், இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னாவை முதலில் பெற்றவர்,
தமிழ் நாட்டின் முதலமைச்சர்.

ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவர்

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் - இந்தியாவின் பதினோராவது குடியரசு தலைவர்

தமிழ் நாட்டின் முதலமைச்சர்கள்

பி. சுபாராயண், பி. டி. இராஜன், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி,
காமராஜர், பக்தவச்சலம், சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி,
நெடுஞ்செழியன், ஜெயலலிதா & ஒ.பன்னிர்செல்வம்

இந்தியாவின் முன்னாள் நடுவண் அமைச்சர்கள்

சி. சுப்பிரமணியம், ஆர். கே. சண்முகம் செட்டி - இந்தியாவின் முதல் நிதி அமைச்சர், மோகன் குமாரமங்கலம், ஜன கிருஷ்ணா மூர்த்தி, இரங்கராஜன் குமாரமங்கலம்,
கே. சந்தானம் - இந்தியாவின் முதல் இருப்பு பாதை அமைச்சர், முரசொலி மாறன், சத்தியவாணி முத்து, சுவாமிநாதன், டி. ஆர். பாலு, வெங்கட்ராமன்,
அருணாசலம் ஆ. ராஜா, தம்பிதுரை, தயாநிதி மாறன், அன்புமணி இராமதாஸ்.

இந்நாள் இந்தியாவின் நடுவண் அமைச்சர்கள்

ப. சிதம்பரம் - நிதி, மு.க. அழகிரி - உரம் மற்றும் இரசாயனம்
ஜி. கே. வாசன் - கப்பல்

மாநில ஆளுநர்கள்

சி. இரங்கராஜன் - இந்தியன் வங்கி & ஆந்திர மாநிலம்
டி.வி. ராஜேஸ்வர்- உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் & சிக்கிம்
இ.எல். நரசிம்மன்- ஆந்திர பிரதேசம்
பரூக் மரைகையார் - கேரளா

இலங்கை நடுவண் அரசு அமைச்சர்கள்
சுந்தரலிங்கம், எஸ். தொண்டமான், லக்ஷ்மன் கதிர்காமர்,
செல்லையா குமாரசூரியர், தேவநாயகம், பி.பி. தேவராஜ், ராதாகிருஷ்ணன், டக்லஸ் தேவானந்தா

சிங்கப்பூர் & மலேசியா

செல்லப்ப இராமநாதன் - அதிபர், சிங்கப்பூர்
சண்முகம் ஜெயகுமார்- துணை அதிபர், சிங்கப்பூர்
தர்மன் சண்முகரத்தினம் - துணை அதிபர், சிங்கப்பூர்
விவியன் பாலகிருஷ்ணன் - குடும்ப நலன், இளையோர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் - சிங்கப்பூர்
சுப்பையா தனபாலன் - பல்வேறு துறைகளின் அமைச்சர், சிங்கப்பூர்
ஜே.பி. ஜெயரத்தனம் - நாடாளுமன்ற முன்னாள் எதிர்கட்சி தலைவர், சிங்கப்பூர்
எஸ். ராஜரத்தினம் - துணை பிரதமர், சிங்கப்பூர்
தனபாலன் - நடுவண் அமைச்சர், சிங்கப்பூர்

சாமி வேலு - நடுவண் அமைச்சர், மலேசியா
கே.ஆர். சோமசுந்தரம் - நாடாளுமன்ற உறுப்பினர், மலேசியா
இராமசாமி பழனிசாமி - துணை முதலமைச்சர், பேனாக் மாநிலம், மலேசியா

மற்ற நாடுகளில் ஆட்சி பொறுப்பில் தமிழர்கள்

வீராசாமி ரிங்கடூ - அதிபர், மொரிசியஸ்
அன்கிடி வீரையா செட்டியார் - தற்காலிக அதிபர், மொரிசியஸ்
அரிரங்கா கோவிந்தசாமி பிள்ளை- தற்காலிக அதிபர், மொரிசியஸ்
நாராயணசாமி சதாசிவம் - வணிகவியல் துறையின் தேசிய தலைவர், பர்மா( ஆங்கிலேய ஆட்சி)
அடுக்கம்பரை சிங்காரவேல் வீராசாமி - தேசிய பாதுகாப்பு வணிகவியல் துறையின் இணை தலைவர், பர்மா( ஆங்கிலேய ஆட்சி)
ராதிகாகிருஷ்ணா படையாச்சி - நடுவண் அரசு இணைஅமைச்சர், தென் ஆப்ரிக்கா
ராதிகா சிட்சபைஎசன் - முதல் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர், கனடா.
குணசேகரன் கவுண்டர் & பெருமாள் மூபனர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பிஜி தீவுகள்
விசுவநாதன் ருத்ரகுமாரன் - நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர்

உலகளவில் முக்கிய பொறுப்புக்கள்

நவநீதம் பிள்ளை - ஐ. நா மனித உரிமை மன்றத்தின் தலைமை நிர்வாகி
ராதிகா சோரமசாமி - குழந்தை பாதுகாப்பு துறையில் ஐ.நா மன்றத்தின் செயலர்.
ஜேம்ஸ் அப்பாதுரை - NATO செய்தி தொடர்பாளர்
ஆற்காடு ராமசாமி முதலியார் - ஐ. நாவின் தொழில் மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் முதல் தலைவர்

Thursday, June 28, 2012

சென்னை வரலாறு

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

சென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை.

ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.

சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.

எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.

சென்னை வரலாறு # 01

சென்னை அரிய புகைப்படங்கள்


சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள செனட் இல்லம். 




ஸ்பென்செர் ப்ளாசாவின் பழைய தோற்றம் .




தாஜ் ஓட்டல் பணியாளர், தன் பாரம்பரிய உடையில்..




குதிரைவண்டிச் சவாரி.




மதராசப்பட்டினத்து மளிகைக் கடை




மூர் மார்க்கெட்டின் முகப்புத் தோற்றம்




கொத்தவால்சாவடி காய்கறி சந்தை




போர்டு' ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம்.




கார் ஷோரூம்.




பேங்க் ஆப் மெட்ராஸ் - 1935.




அன்றைய ஆம்புலன்ஸ் வாகனங்கள்.




சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு செல்லும் காட்சி - 1925.




மயிலாப்பூர் கோயிலின் அழகிய காட்சி - 1906.




சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.




அரசினர் இல்லம்.



சென்னை வரலாறு # 02

சென்னை அரிய புகைப்படங்கள்


ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட, மெட்ராஸ் அரசு மாளிகை மற்றும் நிர்வாக கட்டடத்தின் தோற்றம். (இன்றைய கவர்னர் மாளிகை வளாகம்).




சென்னை கடற்கரைச் சாலை, 1915களில்....




சென்னை மாநிலக் கல்லூரியின் பழைய தோற்றம்.




ஆங்கிலேயர் காலத்திய கிருத்துவ தேவாலயம். கோதிக் கட்டடக்கலை 1871.






மெட்ராஸ் கிளப் 1901 களில்...






1895ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் தோற்றம்..






20ம் நூற்றாண்டு துவக்கத்தில் சென்னையின் ஆள் அரவமற்ற ஒரு வீதி.




மன்றோ சிலை.




பிரிட்டிஷாரின் நிர்வாகக் கட்டடம்.




பாரிமுனை .






பெட்ரோல் பங்க் .






மசூலா படகு,1851.






துறைமுகத்துக்கு சொந்தமான படகு .